கர்நாடக சட்டசபை கூட்டம் செப்டம்பரில் நடக்கும்; சபாநாயகர் காகேரி பேட்டி


கர்நாடக சட்டசபை கூட்டம் செப்டம்பரில் நடக்கும்; சபாநாயகர் காகேரி பேட்டி
x

கர்நாடக சட்டசபை கூட்டம் செப்டம்பர் மாதம் நடக்கும் என்று சபாநாயகர் காகேரி கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை கூட்டம் செப்டம்பர் மாதம் நடக்கும் என்று சபாநாயகர் காகேரி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சகித்து கொள்ள முடியாது

கர்நாடக சட்டசபையில் காகித பயன்பாட்டை ஒழிக்க 'இ-விதான்' திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பணியை மேற்கொள்ளும் பொறுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தங்கள் பணியில் போதிய ஆர்வம் காட்டவில்லை. சட்டசபை மட்டுமல்ல. நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை சரியாக செயல்பட்டால் தான் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும்.

அதிகாரிகளின் அலட்சியப்போக்கை சகித்து கொள்ள முடியாது. உறுப்பினர்கள் சட்டசபை கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் பங்கேற்பதின் அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உறுப்பினர்கள் ஆஜராவதை உறுதி செய்வது அந்தந்த கட்சி தலைவர்களின் கடமை.

சட்டசபை கூட்டம் நடைபெறும்போது, உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டால் அதுகுறித்து வாக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

சட்டசபை கூட்டம்

கர்நாடக சட்டசபை கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். கடைசியாக கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதனால் செப்டம்பர் மாதம் சட்டசபை கூட்டம் நடைபெறும். மந்திரிசபை கூட்டத்தில் இதுகுறித்து அரசு முடிவு எடுக்கும். 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாடு கனடாவில் வருகிற 22-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நானும், மேல்-சபை சார்பில் பசவராஜ் ஹொரட்டியும் கலந்து கொள்கிறோம். அந்த மாநாட்டை முடித்து கொண்டு இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு செல்கிறோம். அந்த பயணத்தை முடித்து கொண்டு வருகிற 4-ந் தேதி நாடு திரும்புகிறோம்.

இவ்வாறு காகேரி கூறினார்.


Next Story