கர்நாடகா: வேறு சாதி இளைஞரை காதலித்ததால்,பெற்ற மகளை ஆணவ கொலை செய்த தந்தை...!


கர்நாடகா: வேறு சாதி இளைஞரை காதலித்ததால்,பெற்ற மகளை ஆணவ கொலை செய்த தந்தை...!
x

வேறு சாதி வாலிபரை காதலித்ததால் பள்ளி மாணவியை ஆணவ கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பல்லாரி,

பல்லாரி மாவட்டம் குடுத்தினி அருகே சித்தம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஓம்கார கவுடா. தொழிலாளி. இவரது 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் தினமும் தனியாக தான் பள்ளிக்கு சென்று வந்தாள். இந்த நிலையில் மாணவிக்கும், கோட்டூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் 2 பேரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. நாகராஜ், பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதலுக்குள் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஓம்கார கவுடா தனது மகளை அழைத்து, காதலை கைவிடும்படி கூறி எச்சரித்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை கைவிட மறுத்ததோடு, நாகராஜூடன் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் ஓம்கார கவுடா ஆத்திரமடைந்தார்.

இந்த நிலையில் ஓம்கார கவுடா, தனது மகளை டவுன் பகுதியில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஓட்டலுக்கு அழைத்து சென்று பிடித்த உணவு வகைகள் வாங்கி கொடுத்ததோடு, நகைக்கடைக்கு சென்று தங்க கம்மல், மோதிரம் ஆகியவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அங்குள்ள பசவேஸ்வரா கோவிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பின்னர் இரவு நேரம் ஆனதால் நாகராஜ், தனது மகளை வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது வீட்டு செல்லும் வழியில் கிராமத்தின் வெளி பகுதியில் உள்ள கால்வாயில் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், மகள் என்றுகூட பார்க்காமல், மாணவியை தண்ணீரில் மூழ்கடித்தார். இதனால் மூச்சுத்திணறிய அந்த மாணவி, 'அப்பா.. அப்பா...' என்று கதறி உள்ளார். ஆனாலும், அவர் விடாமல் தண்ணீரில் மாணவியை மூழ்கடித்தார். இதில் மாணவி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதையடுத்து ஓம்காரகவுடா, தனது நண்பர் பீமப்பா என்பவரின் வீட்டுக்கு சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து திருப்பதிக்கு தப்பி சென்றுவிட்டார். முன்னதாக தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவர் தனது மகளை காணவில்லை என குடுத்தினி போலீசில் புகார் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் போலீசாருக்கு ஓம்கார கவுடா மீது சந்தேகம் எழுந்தது. இதனால் திருப்பதிக்கு சென்று திரும்பிய அவரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகள் வேறு சாதியை சேர்ந்த வாலிபரை காதலித்ததால், அவளை கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீசார் ஓம்கார கவுடாவை கைது செய்தனர்.

மேலும் அவருக்கு உதவியதாக பீமப்பா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் கால்வாயில் மாணவியின் உடலை தேடி வருகிறார்கள். இதுகுறித்து குடுத்தினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் வேறு சாதியை சேர்ந்தவரை காதலித்ததால், அவருக்கு பிடித்ததை செய்து கால்வாயில் மூழ்கடித்து தந்ைத ஆணவ கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story