கார்த்திகை தீப அகல்விளக்குகள்


கார்த்திகை தீப அகல்விளக்குகள்
x
தினத்தந்தி 4 Dec 2022 9:08 PM GMT (Updated: 4 Dec 2022 9:08 PM GMT)

கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அகல் விளக்குகள்

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ரெடிமேடு விளக்குகள்

இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

கொரோனா பரவல்

பெங்களூரு பாட்டரி டவுனில் அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரமேஷ் கூறியதாவது:-

கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைவரும் மண் அகல் விளக்குகளையே பயன்படுத்தினர். இதனால் கார்த்திகை தீப பண்டிகையின்போது, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அகல் விளக்குகள் விற்பனையை ஆனது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விளக்குகள் விற்பனை பெருமளவில் சரிந்துவிட்டது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் இல்லாத காரணத்தால் மக்கள் விளக்குகளை வாங்கி செல்கிறார்கள். ரெடிமேடு விளக்குகள் வருகையால் மண் விளக்குகள் விற்பனை சரிந்துவிட்டது. இதுவரை நான் சுமார் 5 ஆயிரம் விளக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளேன். மொத்தமாகவும், சில்லரையாகவும் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 வரை சம்பாதிக்கிறேன். இதுபோன்ற பண்டிகை காலங்களில் வருவாய் சற்று அதிகமாக இருக்கும்.

வருவாய் குறைந்துவிட்டது

தற்போது விளக்குகள் விற்பனை மந்தமாக தான் உள்ளது. இதன் காரணமாக எங்களுக்கு வருவாயும் குறைந்துவிட்டது. நான் ஆண்டு முழுவதும் மண்பாண்ட பொருட்களை தயாரித்து அவற்றை தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறேன். எங்களின் வாழ்க்கை அதே நிலையில் தான் உள்ளது. அகல் விளக்குகள் 2 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரையில் எங்களிடம் உள்ளன.

எங்கள் தொழிலுக்கு தேவையான களிமண்ணை பாகலூர் பகுதியில் இருந்து கொண்டு வருகிறோம். அதற்கு கட்டணம் ஒன்றும் இல்லை. ஆனால் அந்த மண்ணை அங்கிருந்து கொண்டுவர லாரிக்கு வாடகை செலுத்துகிறோம். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

பாதிப்பு

ராஜாஜிநகரில் மண்பாண்ட தயாரிப்பு பொருட்கள், அகல்விளக்குகள் மற்றும் அவற்றுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி திரிவேணி கூறியதாவது:-

கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை ஆகிறது. ஆனால் கொரோனா பரவலுக்கு பிறகு விளக்குகள் விற்பனை பெருமளவில் சரிந்துவிட்டது. மேலும் வாடிக்கையாளர்கள் ஒருமுறை வாங்கி செல்லும் அகல்விளக்குகளை அப்படியே பாதுகாப்பாக வைத்து கொண்டு அடுத்த முறை பயன்படுத்துகிறார்கள். அதனால் பொதுமக்கள் கடைகளுக்கு வந்து விளக்குகளை வாங்குவது குறைந்துவிட்டது. ஏதோ பெயருக்கு சில விளக்குகள் மற்றும் அவற்றுக்கு தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்.

மேலும் நவீன தொழில்நுட்ப வகைவிளக்குகளை அனைவரும் ஆன்லைனில் பதிவு செய்து வாங்கி கொள்கிறார்கள். அதனால் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக அகல் விளக்குகளை உற்பத்தி செய்கிறவர்கள் மற்றும் அதனை விற்கும் எங்களை போன்ற சிறு வியாபாரிகள் போதிய வருவாய் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு திரிவேணி கூறினார்.

உண்மையான பலன் கிடைக்கும்

இந்த நிலையில் மண்விளக்கு பயன்பாடு குறித்தும், அதை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் மங்களூருவைச் சேர்ந்த இல்லத்தரசியான காயத்ரி பிரபு கூறியதாவது:-

கார்த்திகை தீபம் தினத்தன்று மண் விளக்கு ஏற்றுவது நம் முன்னோர்களின் வழக்கம். இன்று நாகரீக வளர்ச்சியால் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம். ரெடிமேடு விளக்குகளை பயன்படுத்துவதனால் பெரிய வியாபாரிகளுக்கு லாபம் தான்.

மண் விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தற்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளது. அவர்கள் வறுமையின் பிடியில் தான் உள்ளனர். இன்னும் அந்த தொழிலை விடாது செய்து வருகிறார்கள். எனவே அவர்களது குடும்பங்களும், அவர்கள் சார்ந்த சந்ததியினரும் வாழ வேண்டும். அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் நாம் மண் விளக்குகளை வாங்கி அதை பயன்படுத்த வேண்டும். அதேபோல் கோவில்களில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றினால் தான் உண்மையான பலன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story