கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!


கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
x
தினத்தந்தி 19 Nov 2022 12:19 PM GMT (Updated: 19 Nov 2022 12:27 PM GMT)

சபரிமலை பக்தர்கள் 44 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பத்தனம்திட்டா மாவட்டம் லாஹா என்ற இடத்தில் கவிழ்ந்தது.

பத்தனம்திட்டா,

சபரிமலை பக்தர்கள் 44 பேரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று சனிக்கிழமை காலை பத்தனம்திட்டா மாவட்டம் லாஹா என்ற இடத்தில் வளைவில் திரும்பும்போது கவிழ்ந்தது.

உடனே அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கிய பக்தர்களை காப்பாற்றினர். அதன்பின், தகவலறிந்து உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் கிரேன் மூலம் பஸ் மீட்கப்பட்டது.

அதில் பயணித்த சபரிமலை பக்தர்கள் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது.

காயமடைந்த பக்தர்களை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சென்று பார்வையிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பக்தர்கள் 5 பேர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயங்களுக்கு உள்ளான எட்டு வயது சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. கோட்டயம் மருத்துவமனையில் சிறுவனுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

லேசான காயம் அடைந்த மற்றவர்கள் பெருநாடு அரசு மருத்துவமனை மற்றும் பத்தனம்திட்டா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஸ் பிரேக் பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story