'பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் பெண் ஆடை அணிந்திருந்தால்' - எழுத்தாளருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்டு
புகார் கொடுத்தவர் பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்ததாக கூறி அவர் தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கோர்ட்டு முன்ஜாமின் வழங்கியது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவிக் சந்திரன். 74 வயதான சிவிக் சந்திரன் மாற்றுத்திறனாளி ஆவார்.
இதனிடையே, சிவிக் சந்திரன் தன்னை கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில் வைத்து கடந்த 2020 பிப்ரவரியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் எழுத்தாளர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் கொடுத்துள்ள பெண் தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் குற்றஞ்சாட்டப்பட்ட சிவிக் சந்திரன் இணைத்து கொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோர்ட்டு முன்ஜாமின் வழங்கியது.
முன் ஜாமின் வழங்கியதற்கான உத்தரவு நகல் இன்று வெளியானது. அதில், முன் ஜாமின் கோரி மனுதாரர் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தனது உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் உள்ளது. உடல் ரீதியிலான தொடர்பு (Physical Contact) இருந்தது ஒப்புக்கொண்டபோதும், 74 வயதான மாற்றுதிறனாளி நபர் புகார் அளித்த பெண்ணை தனது மடியில் வலுக்கட்டாயமாக அமரவைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறுவதை நம்பமுடியவில்லை. ஆகையால், சட்டப்பிரிவு 354 ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது' என கருதப்படுகிறது. இதன் மூலம் மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கப்படுகிறது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.