

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு பொறியியல் கல்லூரி அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதில் பயணிகள் அமர வசதியாக இருக்கை போடப்பட்டு இருந்தது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்ந்து இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி அங்கு வந்த மர்மநபர்கள் இருக்கையை சேதப்படுத்தி உள்ளனர்.
மறுநாள் காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் நிழற்குடை இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர். மேலும், இந்த செயலை கண்டிக்கும் விதமாக மாணவ-மாணவிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, சேதமடைந்த இருக்கையில் மாணவ-மாணவிகள் சேர்ந்து அமர்ந்து இருந்தபடி தங்களது எதிர்ப்பை புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.