கேரளா: கனமழையால் 6 பேர் உயிரிழப்பு - ஒருவர் மாயம்


கேரளா: கனமழையால் 6 பேர் உயிரிழப்பு - ஒருவர் மாயம்
x

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மாயமானதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போய் உள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கேரளாவின் தென் மாவட்டங்களில் வரும் புதன் கிழமை வரை கனமழை பெய்யும் என்றும் அதன் பின்னர் வட மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என்றும், 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 2 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், மாநில அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இடுக்கி மாவட்டத்தில் இரவு நேர பயணங்கள் தடை செய்யப்பட்டு உள்ளது.


Next Story