கே.ஜி.எப். பட நடிகர் கிருஷ்ணா ராவ் மரணம்


கே.ஜி.எப். பட நடிகர் கிருஷ்ணா ராவ் மரணம்
x
தினத்தந்தி 7 Dec 2022 6:45 PM GMT (Updated: 7 Dec 2022 6:45 PM GMT)

கே.ஜி.எப். பட நடிகர் கிருஷ்ணா ராவ் மரணம் அடைந்தார்.

பெங்களூரு:

பிரபல கன்னட நடிகர் யஷ் நடித்த 'கே.ஜி.எப்.' 1 மற்றும் 2-வது பாகங்களில் கண் தெரியாத முதியவராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கிருஷ்ணா ஜி.ராவ். பெங்களூருவில் வசித்து வந்த இவர் வயோதிகம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கிருஷ்ணா ஜி.ராவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை கிருஷ்ணா ஜி.ராவ் இறந்தார். அவருக்கு வயது 73. துமகூரு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணா ஜி.ராவ் கடந்த 30 ஆண்டுகளாக கன்னட திரை உலகில் பணியாற்றி வந்தாலும் கே.ஜி.எப். படத்திற்கு பின்னர் தான் பிரபலம் அடைந்தார். அவரை கே.ஜி.எப். தாத்தா என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். கே.ஜி.எப். படத்திற்கு பின்னர் கிருஷ்ணா ஜி.ராவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அவர் கன்னடத்தில் நாமோ நாராயணா என்ற படத்திலும் நடித்து இருந்தார். அந்த படம் வெளியாகும் முன்பே உயிரிழந்து விட்டார். கிருஷ்ணா ஜி.ராவ் மறைவுக்கு நடிகர் யஷ் உள்பட கன்னட திரைஉலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story