வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம் : பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்


வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம் : பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்
x

வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல்-ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கிவைக்கிறார். அத்துடன் தமிழகத்தில் இருந்து வாரணாசி சென்றுள்ள உயர்மட்டக்குழுவினருடன் அவர் கலந்துரையாடல் நடத்துகிறார்.

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு மாநிலங்களின் கைத்தறி, கைவினைப்பொருள், புத்தக, ஆவணப்படம், சமையல் தொடர்பான பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

மேலும் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், மாநாடுகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தர்மேந்திர பிரதான்

இந்த நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் மருமகன் கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. காசியின் அனுமன் படித்துறையில் உள்ள பாரதியின் இல்லம் கற்றல் மற்றும் புனித யாத்திரையின் மையமாக உள்ளது.

சமூக நீதி மற்றும் பெண் விடுதலை தொடர்பான பாரதியின் எழுத்துகள் இன்றும் பயனுள்ளவை. காசியில்தான் பாரதிக்கு ஆன்மிகம் மற்றும் தேசியத்தின் மீது நாட்டம் ஏற்பட்டது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் இதற்காகவே அர்ப்பணித்தார் என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

அனுபவம் பகிர்தல்

ஒரு மாதம் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக வாரணாசி களைகட்டியுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் பிரதிநிதிகளை வரவேற்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ வல்லுனர்கள், வர்த்தகர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் மற்றும் பிற தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, அவர்களின் அறிவு, கலாசாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் இந்த காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாய்ப்பளிக்கும் என கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story