தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதில் கர்நாடகம், கடினமான முடிவு எடுக்க வேண்டும்; குமாரசாமி ஆவேசம்


தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதில் கர்நாடகம், கடினமான முடிவு எடுக்க வேண்டும்; குமாரசாமி ஆவேசம்
x

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதில் கர்நாடக அரசு கடினமான முடிவு எடுக்க வேண்டும் என்று குமாரசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

பெங்களூரு:

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதில் கர்நாடக அரசு கடினமான முடிவு எடுக்க வேண்டும் என்று குமாரசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தண்ணீர் பிரச்சினை

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கர்நாடக அரசு கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கபினியில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடியும் நீர் திறந்துவிட்டது. கர்நாடகம் கட்டிய அணைக்கு எந்த மாநிலமும் பணம் கொடுக்கவில்லை. நமது மாநிலத்தை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சாலையில் போராட்டம் நடத்தினால் எந்த பயனும் இல்லை. கர்நாடக அரசு கடினமான முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க நமது பணத்தில் அணை கட்டினோமா?. தேவைப்பட்டால் தமிழகம் தங்களின் சொந்த பணத்தில் 2, 3 அணைகளை கட்டிக் கொள்ளட்டும். தேவேகவுடா பிரதமராக இருந்தபோது, வங்காளதேசத்துடனான தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது. ஆனால் நமது நாட்டில் இரு மாநிலங்கள் இடையே உள்ள இந்த காவிரி பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள், கர்நாடகம் காவிரி நீரை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

தைரியமாக பேச வேண்டும்

நான் டெல்லி செல்லும்போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன். மாநிலங்களவையில் தேவேகவுடா காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பேசியுள்ளார். அவரால் நிற்க முடியாத சூழ்நிலையில் கூட நமது மாநில பிரச்சினை குறித்து பேசியுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே பேசினாரா?. அவர் ஏன் பேசவில்லை?. தமிழகத்தினர் எப்படி நடந்து கொள்கிறார்கள், நீங்கள் (காங்கிரஸ்) எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பது தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு தாக்கல் செய்ததும், கர்நாடகம் தண்ணீரை திறந்தது ஏன்?. அதை கர்நாடக அரசு எதிர்க்காதது ஏன்?. காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறியதும் நீரை திறந்துவிட வேண்டிய அவசியம் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் நமக்கு நீர் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை. பா.ஜனதாவினர் மத்திய அரசிடம் தைரியமாக பேச வேண்டும்.

உத்தரவாத திட்டங்கள்

இங்கு தண்ணீரை திறந்துவிட்டு விட்டு, இங்குள்ள காங்கிரசார் உத்தரவாத திட்டங்களை தெலுங்கானாவுக்கு எடுத்து சென்றனர். கர்நாடகத்தில் மோசமான காங்கிரஸ் ஆட்சியை அகற்ற பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கிறோம். கர்நாடகத்தின் நலனுக்காகவும், எங்களின் பலத்தை சற்று உயர்த்தி கொள்ளவும் இந்த கூட்டணியை அமைக்கிறோம். 21-ந் தேதி (நாளை) டெல்லி சென்று பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story