காஷ்மீரில் நிலச்சரிவு; தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சோகம்
காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்ததில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உதாம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், முத்தல் பகுதிக்கு உட்பட்ட சமோலே கிராமத்தில் நேற்றிரவு பில்லா சன் என்பவரின் குடும்பத்தினர் வீட்டில் உள்ள அறை ஒன்றில் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
அவர்களது குழந்தைகளான ஆரிப் (வயது 3) மற்றும் 2 மாத குழந்தை கனி ஆகியோர் மற்றோர் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில், கனமழையால் அந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களது வீடு மண்ணிற்குள் புதைந்துள்ளது.
இதில், குடும்பத்தினர் உடனடியாக வெளியே சென்றதில் உயிர் தப்பினர். ஆனால், உறங்கி கொண்டிருந்த 2 குழந்தைகளும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டன. இதன் பின்னர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். எனினும், உயிரிழந்த 2 குழந்தைகளின் உடல்களையே அவர்களால் மீட்க முடிந்தது.
இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா வருத்தம் தெரிவித்து கொண்டதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.