நீதி உறுதி செய்யப்படுவதில் மொழி ஒரு தடையாக உள்ளது: சட்ட மந்திரி பேச்சு


நீதி உறுதி செய்யப்படுவதில் மொழி ஒரு தடையாக உள்ளது:  சட்ட மந்திரி பேச்சு
x

நீதி உறுதி செய்யப்படுவதில் மொழி ஒரு தடையாக உள்ளது என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.



புதுடெல்லி,


நாட்டில் அரசியல் சாசன தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன தின கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அரசியல் சாசன தினத்தினை முன்னிட்டு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று பேசும்போது, இந்த நாளில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார் கூறிய விசயங்களை நினைவுகூர்வது சரியாக இருக்கும்.

இந்த சுதந்திரம் நம் மீது மிக பெரிய பொறுப்புகளை சுமத்தியிருக்கிறது. இதனை நாம் மறந்து விடவேண்டாம். சுதந்திரம் பெற்றதனால், ஏதேனும் தவறு நடந்தால், அதற்கு பிரிட்டிஷாரை குற்றம் சொல்லும் வாய்ப்பை நாம் இப்போது இழந்து விட்டோம் என்று எச்சரிக்கை செய்யும் வகையில் அம்பேத்கார் கூறியுள்ளார்.

இந்தியா போன்ற பரந்த நாட்டில், மொத்த மக்கள் தொகையில் 65% பேர், இன்னும் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர். புரிந்து கொள்வதற்கு பிராந்திய மற்றும் உள்ளூர் மொழியே அவர்கள் இடையே பயன்பாட்டில் உள்ளது.

நாட்டில் சட்ட விசயங்கள் மற்றும் சட்டப்பூர்வ தனி வகை சொற்கள் மற்றும் தொடர்கள் ஆகியவை பொதுஜனங்களால் புரிந்து கொள்ள கூடிய உள்ளூர் மொழியில் கிடைப்பதில்லை.

இதனால், அனைவருக்கும் பொதுவான நீதி கிடைப்பது உறுதி செய்யப்படுவதற்கான தடைகளில் ஒன்றாக மொழி உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.


Next Story