மத்திய பிரதேசம்; கர்ணி சேனா நிர்வாகி நடுரோட்டில் படுகொலை: பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ


மத்திய பிரதேசம்; கர்ணி சேனா நிர்வாகி நடுரோட்டில் படுகொலை:  பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ
x

Image courtesy:  ndtv

மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலகம் முன் கர்ணி சேனா நிர்வாகி நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.போபால்,மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கர்ணி சேனா அமைப்பின் இத்தர்சி நகர செயலாளராக இருந்தவர் ரோகித் சிங் ராஜ்புத் (வயது 28). இவரது நண்பர் சச்சின் பட்டேல். இவர்கள் இருவரும் மார்க்கெட் பகுதியில் தேநீர் கடை ஒன்றின் அருகே நகராட்சி அலுவலகம் முன் நின்று கொண்டு இருந்துள்ளனர்.

அந்த வழியே மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வந்துள்ளனர். இவர்களை நெருங்கிய அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில், மோதல் ஏற்பட்டு உள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பலமுறை குத்தியதில் ராஜ்புத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை தடுக்க வந்த சச்சினுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், ராஜ்புத் உயிரிழந்து விட்டார். அவரது நண்பருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராகுல் ராஜ்புத், அங்கித் பட் மற்றும் ஐசு மாளவியா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர். பழைய பகையால் இந்த தாக்குதல் நடந்துள்ளது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்ததற்காக அங்கித் பட்டின் வீடு, உதவி மண்டல மாஜிஸ்திரேட், காவல் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தள்ளப்பட்டது. பிற இரு குற்றவாளிகளின் வீடுகளும் இடித்து தள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story