மராட்டியத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம்: தேவேந்திர பட்னாவிஸ்


மராட்டியத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம்: தேவேந்திர பட்னாவிஸ்
x

மராட்டியத்தில் மந்திரி சபை விரிவாக்கம் நடப்பு வாரத்திலேயே செய்யப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணியை உருவாக்கியதால் கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி அணியினர், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர்.

கடந்த ஜூன் 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதன்பிறகு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்றார். நேற்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று இருந்தார். இந்த பயணத்தின் போது பா.ஜனதா மேலிடத்துடன் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ், நீங்கள் கற்பனை செய்யும் நேரத்திற்கு முன்பாகவே மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்றார். தேவேந்திர பட்னவிசுக்கு உள்துறை பொறுப்பு கிடைக்கக்கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story