ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் கும்பல் சிக்கியது - 5 போலீசார் உட்பட 17 பேர் கைது
ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 போலீசார் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
குப்வாரா,
குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து 5 போலீசார், ஒரு அரசியல் பிரமுகர், ஒப்பந்ததாரர் மற்றும் கடைக்காரர் உட்பட 17 பேர் கொண்ட போதைப்பொருள் கும்பலை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குப்வாராவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை அடையாளம் காண குப்வாரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வசீம் நஜார் என்ற கோழிக்கடை உரிமையாளரை அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருளுடன் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் வசீம் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக இருப்பதை ஒப்புக்கொண்டார். மேலும் குப்வாரா மாவட்டம் மற்றும் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் உள்ள அவரது கூட்டாளிகளின் பெயர்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்து மேலும் 16 பேரை கைது செய்தனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.