விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்...!
ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபருக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த விவகாரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா, 34, என்பது தெரிய வந்தது. இதை அடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுநீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த ஷங்கா மிஸ்ராவை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 6 வாரங்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மிஸ்ராவை டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். சங்கர் மிஸ்ரா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து, சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்தவர் என்றும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சங்கர் மிஸ்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சங்கர் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நேற்று, போதை ஆசாமி ஷங்கர் மிஸ்ராவை, அவர் பணியாற்றி வந்த "வெல்ஸ் பார்கோ" என்ற பன்னாட்டு நிறுவனம் டிஸ்மிஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.