ராஜஸ்தானில் தென்கொரிய சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது


ராஜஸ்தானில் தென்கொரிய சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது
x

பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஜோத்பூரைச் சேர்ந்த 25 வயது தீபக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஜெய்ப்பூர்,

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த தென்கொரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பசேட்டியா ஹில் பகுதியை சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளார். அந்த பெண் தனியாக செல்வதை கவனித்த நபர் ஒருவர், அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனை அந்த பெண் வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினார். இந்த சம்பவம் காவல்துறையினரின் கவனத்திற்கு வந்த நிலையில், ஜோத்பூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஜோத்பூரைச் சேர்ந்த 25 வயது தீபக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த மாதம் ஜெய்சால்மரில், இத்தாலியைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணிக்கு ரெயில் ஊழியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் அளிக்கவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட நபரை போலீசார் எச்சரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.Next Story