மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் இரும்பு கம்பிகள் திருடியவர் கைது


மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் இரும்பு கம்பிகள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:11+05:30)

சிக்கமகளூருவில் மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் இரும்பு கம்பிகளை திருடிவர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் கத்ரிமித்ரி கிராமத்தில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த கல்லூரியில் இருந்து இரும்பு கம்பிகள் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு போலீசார் மருத்துவ கல்லூரி கட்டிடம் அருகே அமைந்துள்ள நல்லூர் என்னும் கிராமத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சரக்கு ஆட்டோ ஒன்று இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு வந்தது. இதை பார்த்த போலீசார் சந்தேகத்தில் ஆட்டோவை மறித்து விசாரித்தனர்.

அப்போது டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அதேப்பகுதியை சேர்ந்த ரவி என்பதும், அவர் தான் மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் இருந்து இரும்பு கம்பிகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story