சேர்ந்து வாழ சம்மதித்த சில நிமிடங்களில் கோர்ட்டு வளாகத்தில் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவர்
சேர்ந்து வாழ சம்மதித்த சில நிமிடங்களில் கோர்ட்டு வளாகத்தில் மனைவியை கணவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் ஹொலனரசிபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் அதே மாவட்டம் தட்டிக்கீரா பகுதியை சேர்ந்த சித்ராவுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கணவன் - மனைவி ஹொலனரசிபுராவில் உள்ள குடும்ப கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
விவாகரத்து கேட்டு இருவரும் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தம்பதியருக்கு நேற்று ஆலோசனை அமர்வு நடைபெற்றது.
கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த ஆலோசனை அமர்வில், குழந்தைகளின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ்வதாக சிவக்குமார் - சித்ரா தம்பதி சம்மதித்தனர்.
1 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக்கு பின் இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்ததை தொடர்ந்து இடைவேளை வழங்கப்பட்டது.
அப்போது, சித்ரா கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த அவரது கணவர் சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் சித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சித்ரா கோர்ட்டு வளாகத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சித்ராவை கழுத்தறுத்தபின் அவரின் குழந்தை மீதும் தாக்குதல் நடத்த சிவக்குமார் முற்பட்டுள்ளார்.
அப்போது, சித்ராவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற சிவக்குமாரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கணவன் சிவக்குமார் கத்தியால் கழுத்தை அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சித்ராவை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சித்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர கணவர் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.