பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து 'ஸ்குரு டிரைவரால்' 51 முறை குத்தி கொடூரமாக கொலை செய்த பஸ் கண்டக்டர்
காதலியை கொலை செய்ய அவர் விமானத்தில் வந்துள்ளார். காதலியின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்துள்ளார்.
ராய்ப்பூர்,
பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து 'ஸ்குரு டிரைவரால்' 51 முறை குத்தி கொடூரமாக கொலை செய்த பஸ் கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம் (வயது 20) என்ற மகளும் உள்ளனர்.
இதனிடையே, நீல்குஷம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்ல ஜாஷ்பூர் - கோர்பா இடையே செல்லும் தனியார் பஸ்சில் பயணித்துள்ளார்.
அப்போது, அந்த பஸ் கண்டெக்டரான ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஷபாஷ் கானும், நீல்குஷமும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். குஜராத்தில் இருந்தவாறு நீல்குஷிடம் பேசி வந்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் ஷபாஷ் கானுடன் பேசுவதை விரும்பாத நீல்குஷ் அவருடன் காதலை முறித்து, செல்போன் அழைப்புகளை ஏற்காமலும், வாட்ஸ்-அப்பில் பிளாக் செய்தும் உள்ளார்.
அதன் பின்னர், தனது சொந்த ஊரான ஜாஷ்பூரில் ஒரு நபருடன் நீல்குஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷபாஷ் கானுடன் பேசுவதை நிறுத்திய நீல்குஷ் அந்த ஆண் நபருடன் பேசியுள்ளார்.
நீல்குஷ் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ஷபாஷ் கான் தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். தன்னிடம் பேசும்படி நீல்குஷை அவர் மிரட்டி வந்துள்ளார். மேலும், நீல்குஷின் பெற்றோருக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் ஷபாஷ் கான் சத்தீஷ்கரின் ராய்ப்பூர் வந்துள்ளார். ராய்ப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலாஸ்பூருக்கு வந்துள்ளார். பின்னர், கடந்த சனிக்கிழமை மாலை ஷபாஷ் கான் நீல்குஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் நீல்குஷ் மட்டுமே தனியாக இருந்துள்ளார். அப்போது, தன்னை காதலிக்கும்படியும், தொடர்ந்து தன்னிடம் பேசும்படியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷபாஷ் கான் தான் கொண்டு வந்த 'ஸ்குரு டிரைவரால்' நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். நீல்குஷ் கத்தி கூச்சலிடாமல் இருக்க தலையணையால் அவரது முகத்தை அழுத்தியுள்ளார்.
நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் 'ஸ்குரு டிரைவரால்' ஷபாஷ் கான் 51 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நீல்குஷ் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நீல்குஷை கொலை செய்த பின் ஷபாஷ் கான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
வெளியே சென்ற நீல்குஷின் சகோதரன் நீலீஸ் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது சகோதரி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து போலீசார் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நீல்குஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் நீல்குஷின் உடலில் 51 இடங்களில் ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டிருப்பதும், மார்பு பகுதியில் மிகப்பெரிய அளவில் கொடூர காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த கொடூர கொலையை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய ஷபாஷ் கானை 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.