புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்...!


புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்...!
x
தினத்தந்தி 30 Nov 2022 8:19 AM IST (Updated: 30 Nov 2022 8:28 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது.

புதுவை,

புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதல்-அமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் யானைக்கு பழம், அருகம்புல் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.

தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story