மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்பு


மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு  புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்பு
x

மங்களூரு ஆட்டோ குண்டு ெவடிப்பு சம்பவத்துக்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதற்கிடையே பயங்கரவாதி ஷாரிக் மங்களூருவில் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சி உள்ளிட்ட 6 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் அம்பலமாகியுள்ளது.

மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாள்தோறும் புதிய, புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மங்களூரு குண்டுவெடிப்பு

இந்த வழக்கில் கர்நாடக போலீசாரும், என்.ஐ.ஏ. அமைப்பும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 19-ந்தேதி மங்களூரு நாகுரி பகுதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் நாசவேலைக்கு திட்டமிட்ட சூத்திரத்தாரியான ஷாரிக்கே பலத்த தீக்காயம் அடைந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவரும் காயம் அடைந்தார். இருவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிற்கு 8 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்றும், இன்னும் 25 நாட்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவ குழுவினர் முடிவு செய்துள்ளனர். குண்டுவெடிப்பில் ஷாரிக் பலத்த காயம் அடைந்துள்ளதால், அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடியவில்லை. அவர் குணமான பிறகு தான் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஷாரிக் வாய் திறந்தால் தான் இந்த வழக்கில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போனில் அதிர்ச்சி தகவல்

ஷாரிக், தனது அடையாளத்தை வெளிகாட்டாமல் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர் போல மாற்றி கொண்டு சுற்றி வந்துள்ளார். அவரது செல்போன் வாட்ஸ்-அப்பில் சிவன் படத்தையும் வைத்திருந்தார். இந்த நிலையில், ஷாரிக்கின் செல்போனை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர். அவரது 'வாட்ஸ்-அப்' தொடர்பான தகவல்கள், அவர் என்ன தேடலில் ஈடுபட்டார்?. அவர் செல்போனில் யாருடன் பேசினார், அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், ஷாரிக், மங்களூருவில் 3 கோவில்கள் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கத்ரி மஞ்சுநாதர் கோவில்

மங்களூரு கத்ரி பகுதியில் உள்ள மஞ்சுநாதர் கோவில், குத்ரோலியில் உள்ள கோகர்ணநாத கோவில், மங்களாதேவி கோவில் மற்றும் மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையம், கர்நாடக அரசு பஸ் நிலையம், மன்னகுட்டா பகுதியில் உள்ள சாந்திநிகேதன் அரங்கம் ஆகிய 6 பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஷாரிக் சதி திட்டம் தீட்டி உள்ளார்.

அவரது முதல் இலக்காக கத்ரி மஞ்சுநாதர் கோவில் இருந்துள்ளது. 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் தற்போது லட்சதீப உற்சவம் நடந்து வருகிறது. இதனால் அங்கு தாக்குதல் நடத்தவும் ஷாரிக் திட்டமிட்டிருந்தார். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் கத்ரி மஞ்சுநாதர் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2-வது இலக்காக கோகர்ணநாதா கோவிலும், 3-வது இலக்காக மங்களாதேவி கோவிலையும் ஷாரிக் குறி வைத்திருந்தார். அந்த கோவில்களிலும் லட்சதீப உற்சவம் நடந்து வருகிறது. கார்த்திகை மாதங்களில் கடலோர மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களில் லட்சதீப உற்சவம் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் 3 கோவில்களிலும் தாக்குதல் நடத்த அவர் சதி திட்டம் தீட்டி உள்ளார்.

குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சி

ஷாரிக் 4-வதாக மன்னகுட்டா பகுதியில் உள்ள சாந்திநிகேதனில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். குண்டுவெடிப்பு நடந்த கடந்த 19-ந்தேதி, சாந்தி நிகேதன் இடத்தை 2 முறை ஷாரிக் கூகுளில் தேடி உள்ளார். அன்றைய தினம் அங்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் குழந்தைகள் விழா நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர். இங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு தான் மைசூருவில் இருந்து மங்களூருவுக்கு பஸ்சில் வந்தார்.

ஆனால் மைசூருவில் இருந்து மங்களூருவுக்கு நேரடியாக செல்லும் பஸ்சை அவர் தவறவிட்டதால், மற்றொரு பஸ்சில் மைசூருவில் இருந்து மடிகேரி சென்று அங்கிருந்து புத்தூர் வழியாக மங்களூருவுக்கு சென்றிருந்தார். பஸ்சில் அவர் பயணிக்கும்போது மங்களூருவை எப்போது சென்றடைவோம் என்று 8 முறை கூகுள் மேப்பில் தேடி உள்ளார். ஆனால் சரியான நேரத்துக்கு அவரால் செல்ல முடியாததால் தனது திட்டத்தை ஷாரிக் மாற்றினார்.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த 19-ந்தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும் ஷாரிக் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் பசவராஜ் பொம்மை முடிவு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரெயில், பஸ் நிலையம்

இதற்கு அடுத்தபடியாக மங்களூரு படீல் பகுதியில் உள்ள சென்டிரல் ரெயில் நிலையத்திலும், பிஜய் பகுதியில் உள்ள அரசு பஸ் நிலையத்திலும் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அங்கு குண்டுவெடிப்பை நிகழ்த்தி பலரை காவு வாங்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக ஷாரிக்கால் அவரது திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியவில்லை. ஷாரிக் திட்டமிட்டப்படி 6 இடங்களிலும் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றி இருந்தால் மிகப்பெரிய உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கும். தற்போது அந்த சதி திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது

இந்த நிலையில், மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தற்போது 'அடக்குமுறைக்கு எதிரான இஸ்லாமிய அமைப்பு' என்ற புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு அரபு மொழியில் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளது. அந்த அறிக்கை 23-11-2022 என்ற தேதியில் வெளியாகி உள்ளது.

அதில் அமைப்பு பெயருடன், ஷாரிக்கின் இரு பழைய படங்கள் இடம் பெற்றுள்ளது. அதாவது, சிவமொக்கா காட்டு பகுதியில் வெடிகுண்டு பயிற்சி பெற்ற ஷாரிக்கின் படம், மற்றொன்று அவர் குக்கர் குண்டுடன் உள்ள படம் ஆகும்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் விவரம் பின்வருமாறு:-

"மங்களூரு கத்ரி கோவிலில் தாக்குதல் நடத்த எங்கள் முஜாகித் சகோதரர் ஷாரிக் திட்டமிட்டிருந்தார். ஆனால் திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே குண்டுவெடித்துவிட்டது. அவருடைய நோக்கம் பூர்த்தி ஆகாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் இதனை வெற்றியாகவே கருதுகிறோம். எங்கள் சகோதரர் ஷாரிக் பிடிபட்டதால் பலர் மகிழ்ச்சி அடைகின்றனர். குறிப்பாக கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் போன்றவர்கள் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் (அலோக்குமார்) மகிழ்ச்சி குறுகிய காலம் தான் இருக்கும். அடக்குமுறையின் பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். விரைவில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்.

எதற்காக தாக்குதல் நடத்துகிறீர்கள் என கேட்பவர்களுக்கு நாங்கள் பதில் அளிக்க விரும்புகிறோம். எங்கள் மீது வெளிப்படையான போர் பிரகடனபடுத்தப்பட்டதாலும், படுகொலை சம்பவங்கள் அதிகரித்து விட்டதாலும், எங்கள் மதத்தில் தலையிடுவதற்கும், அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்பட்டதாலும் நாங்கள் போரை தொடங்கி உள்ளோம். எங்களுக்கு எதிரான போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். அதுபோல் என்.ஐ.ஏ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளும், இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.

கூடுதல் டி.ஜி.பி. பேட்டி

மங்களூரு வெடிகுண்டு சம்பவத்துக்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று அறிக்கை வெளியிட்டுள்ளது குறித்து கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "இந்த மிரட்டல் அறிக்கையை நாங்களும் கவனித்தோம். இது உண்மையானதா? அந்த பெயரில் பயங்கரவாத அமைப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கண்டறிய மத்திய உள்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) உதவியை கர்நாடக போலீஸ் நாடி உள்ளது. இதுதொடர்பாக நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

தீவிர சோதனை

பயங்கரவாதி ஷாரிக் 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கத்ரி மஞ்சுநாதர் கோவில், குத்ரோலி கோகர்ணநாத கோவில், மங்களாதேவி கோவில், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.


Next Story