ஆபாச வீடியோக்களை அனுப்பி பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த ஷாரிக்


ஆபாச வீடியோக்களை அனுப்பி பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த ஷாரிக்
x

கோப்புப்படம்

பயங்கரவாதி ஷாரிக் ஆபாச வீடியோக்களை இளைஞர்களுக்கு அனுப்பி தனது பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு ஆட்டோவில் எடுத்து சென்றபோது, குக்கர் குண்டு வெடித்தில் காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக் அங்குள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உயிருக்கு அவரை இயக்கியவர்கள் மற்றும் சிலீப்பர் செல்கள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் ஆஸ்பத்திரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஷாரிக் குறித்து தினமும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

10 செல்போன்கள்

இந்த நிலையில் ஷாரிக் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அவர் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டு இருந்துள்ளார். இதற்காக டிப்ளமோ படித்த அவர், பின்னர் மைசூருவில் ஒரு செல்போன் கடையில் சேர்ந்து செல்போன்களை பழுது பார்க்கவும், அதை நவீன முறையில் கையாளவும் பயிற்சி பெற்றார்.

இந்த சந்தர்ப்பங்களில் அவர் 10 செல்போன்களை வாங்கி இருக்கிறார். மேலும் பழுது பார்க்க வரும் செல்போன்களில் உள்ள ஆபாச வீடியோக்கள், அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள், செல்போன் எண்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துள்ளார்.

ஆபாச வீடியோக்கள்

அதை பயன்படுத்தி தான் பதிவிறக்கம் செய்த செல்போன் எண்களில் இருந்து குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேர்வு செய்திருக்கிறார். அவர்களது செல்போன் எண்களுக்கு தன்னிடம் இருந்த 10 செல்போன்களில் இருந்து ஏதாவது ஒரு எண் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவர்கள் பதில் அனுப்பியதும், அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த ஆபாச வீடியோக்கள் இவரிடம் பழுது பார்க்க வந்த செல்போன்களில் இருந்த வீடியோக்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோக்களை பார்த்து தனது வலையில் விழும் இளைஞர்களை கொஞ்சம், கொஞ்சமாக ஷாரிக் மூளைச்சலவை செய்திருக்கிறார்.

40 இளைஞர்களுக்கு பயிற்சி

பின்னர் அவர்களுக்கு பயங்கரவாத வீடியோக்களை அனுப்பி, அதன்மூலம் தனது அமைப்புக்கு ஆள்சேர்த்து நாசவேலையில் ஈடுபட பயிற்சி அளித்திருக்கிறார். இவ்வாறாக இவர் இதுவரை கர்நாடக கடலோர மாவட்டங்களில் மட்டும் 40 இளைஞர்களிடம் ஆபாச வீடியோக்களை காட்டி நேரில் சந்தித்து மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் வழங்கப்படுவது போல் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது அந்த இளைஞர்கள் கர்நாடக கடலோர மாவட்டங்களில் சிலீப்பர் செல்களாக இருந்து பதுங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர் அந்த இளைஞர்களுக்கு எங்கு வைத்து பயிற்சி அளித்தார் என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story