மணிப்பூர் வன்முறை: ஆம்புலன்சுக்கு தீவைப்பு தாய், மகன் உட்பட 3 பேர் பலி


மணிப்பூர் வன்முறை: ஆம்புலன்சுக்கு தீவைப்பு  தாய், மகன் உட்பட 3 பேர் பலி
x

மணிப்பூர் வன்முறையில் ஆம்புலன்ஸ் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில் தாய், மகன் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி

மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.310 பேர் காயம் அடைந்தனர்.

அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதற்கிடையே குகி பயங்கரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது.

மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது. மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story