குண்டும் குழியுமான சாலைகளால் விபத்துக்கள் குறையும்: சத்தீஷ்கர் மந்திரி சொல்கிறார்
நல்ல சாலைகளில் மக்கள் வேகமாகப் பயணிப்பார்கள். அதனால் விபத்துகள் நேரிடும் என்று சத்தீஷ்கர் மந்திரி பிரேம்சிங் டேகம் தெரிவித்துள்ளார்.
ராய்பூர்,
சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக புபேஷ் பகேல் உள்ளார். இவரது மந்திரி சபையில் டாக்டர் பிரேம்சாய் சிங் டேகம் , அங்கம் வகிக்கிறார். பள்ளி கல்வித்துறை, பழங்குடியினர், பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு, கூட்டுறவு உள்ளிட்ட பலதுறைகளை தன் வசம் வைத்திருக்கும் பிரேம்சிங் டேகம் தற்போது நாடு முழுவதும் அறியப்பட்டு இருக்கிறார். சாலைகள் குறித்து பிரேம்சாய் சிங் டேகம் பேசியதுதான் இதற்கு காரணம். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டேகம்,
சாலைகள் மோசமாக இருப்பதாக ஏராளமான புகார்கள் எங்களுக்கு வருகின்றன. ஆனால், அதுபோன்ற சாலைகளில் விபத்துகளே நேரிடுவது இல்லை. சிறப்பாக இருக்கும் சாலைகளில்தான் விபத்துகள் நேரிடுகின்றன. ஏனென்றால், நல்ல சாலைகளில் மக்கள் வேகமாகப் பயணிப்பார்கள். அதனால் விபத்துகள் நேரிடும்" என்று கூறியுள்ளார். மந்திரியின் இந்த பேச்சை பலரும் கேலி செய்து வருகின்றனர்.