குழந்தைகள் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 56 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
குழந்தைகள் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை
Published on

சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகிறது.

அரசு அதிரடி

நாடு முழுவதும் குழந்தைகள் பல்வேறு வகையில் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் கட்டுக்குள் வராமல் ஆங்காங்கே குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆதரவற்றநிலையில் உள்ள குழந்தைகள் தான் இந்தவகையில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையை ஒடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை ஒடுக்கி வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சீண்டல்கள் நடந்து வருவதை கண்காணித்து அதிரடியாக கைது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குழந்தைகளின் ஆபாச படங்கள்

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், பகிர்தல் மற்றும் பதிவிறக்கம் செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் தொடர்பாக சி.பி.ஐ.யின் சிறப்பு பிரிவு தீவிர விசாரணையையும் நடத்தி வருகிறது. இணையம் வழியாக மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மேகா சக்ரா என்ற பெயரில் சி.பி.ஐ. நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் குழந்தைகள் பாலியல் வன்முறை வீடியோக்களை வெளியிட்டது தொடர்பான 2 வழக்குகள் குறித்து நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

19 மாநிலங்கள்

அந்த வகையில் 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட 56 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 'மேகா சக்ரா' ஆபேரஷன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் கார்பன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இன்டர்போல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த இந்த சோதனை நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com