வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை


வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை
x

வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி ஷோபா உறுதி அளித்துள்ளார்.

ஹாசன்-

மத்திய மந்திரி ஷோபா

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தில் பா.ஜனதாவின் முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த பி.பி.சிவப்பாவின் மனைவி சுசீலாம்மா. இவர், நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இவரது மறைவுக்கு பா.ஜனதா தலைவர்கள் இரங்கல் தெரிவித்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் மத்திய இணை மந்திரி ஷோபா, மத்திரி கோபாலய்யா ஆகியோர் நேரில் வந்து சுசீலாம்மாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே மத்திய மந்திரி ஷோபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஹாசனில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் பயந்தபோது, சுசீலாம்மா தைரியமாக முன் வந்து போட்டியிட்டார். அவரது கணவரும் கட்சிக்காக தன்னை அர்பணித்தவர். தற்போது அவர்களின் ஆசியால் மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் கட்சி செல்லும்.

நடவடிக்கை

கர்நாடகத்தில் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வனவிலங்குகள் மற்றும் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் ஏராளமான பயிர்கள் நாசமாகியிருப்பதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். இதற்கான இழப்பீடு தொகை உடனே வழங்கப்படும். இதுகுறித்து ஆய்வு செய்வதற்கும், வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுப்பதற்கும் மாநில அரசு தனி குழு ஒன்றை நியமித்துள்ளது. அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர் இழப்பீடு தொகை வழங்கப்படும்.

மேலும் வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்திவிட்டு, அண்டை மாநிலங்களில் எந்த வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களோ, அதையே நாமும் கடைப்பிடிக்கவேண்டும். ஆனால் வனவிலங்குகளை எக்காரணத்தை கொண்டும் கொல்ல கூடாது. அதற்கு வனத்துறையும் இடம் கொடுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story