கொரோனா கால பணிக்காக மருத்துவ சமூகத்துக்கு இந்திரா காந்தி அமைதி விருது


கொரோனா கால பணிக்காக மருத்துவ சமூகத்துக்கு இந்திரா காந்தி அமைதி விருது
x

கோப்புப்படம்

கொரோனா கால பணிக்காக மருத்துவ சமூகத்துக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட உள்ளது.

புதுடெல்லி,

இந்திரா காந்தி அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு விருதை இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை உருவாக்கி, வழங்கி வருகிறது. ரூ.1 கோடி தொகை, கேடயம் மற்றும் விருது பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது.

இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, இந்தியாவின் ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்துக்கு வழங்கப்படுவதாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அறிவித்துள்ளது. கடந்த 2020, 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் டாக்டர்களும், நர்ஸ்களும் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ஆற்றிய அரும்பணிக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த விருதை பெறுபவரை தேர்வு செய்ததற்கான, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான நடுவர் குழு, கொரோனா போராளிகளான இந்திய மருத்துவ சமூகத்தை விருதுக்கு தேர்வு செய்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்துக்கு தனியாக தேசிய அளவிலான பிரதிதித்துவம் இல்லை. எனவே, டாக்டர்களை உள்ளடக்கிய இந்திய மருத்துவ சங்கம், நர்ஸ்களை உள்ளடக்கிய இந்திய பயிற்சி பெற்ற நர்ஸ்கள் அமைப்பு ஆகிய இரண்டையும் இந்த விருதைப் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story