டீச்சர் ஐ லவ் யூ ...! ஆசிரியைக்கு டார்ச்சர் கொடுத்த மாணவர்கள்...!


டீச்சர் ஐ லவ் யூ ...! ஆசிரியைக்கு டார்ச்சர் கொடுத்த மாணவர்கள்...!
x
தினத்தந்தி 28 Nov 2022 5:51 AM GMT (Updated: 28 Nov 2022 6:49 AM GMT)

கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றும் ஒருவருக்கு மாணவர்கள் சிலர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொந்தரவளித்து வந்து உள்ளனர்.

லக்னோ:

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியை பார்த்து மாணவர்கள் சிலர் 'ஐ லவ் யூ' சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் மாணவர்கள் மீது ஆசிரியை போலீசில் புகார் அளித்து உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ளது இன்டர்மீடியட் இருபாலர் கல்லூரி. கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றும் ஒருவருக்கு மாணவர்கள் சிலர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொந்தரவளித்து வந்து உள்ளனர்.ஆசிரிய பள்ளிக்குச் செல்லும் வழியிலும், வீடு திரும்பும்போதும் அவர்கள் பலமுறை ஆபாசமான கருத்துக்களைக் கூறி வந்தனர்.

ஆசிரியையை ஒருமையில் அழைப்பதும், அவரது அனுமதியின்றி வீடியோக்கள் எடுப்பதும் தொடர்கதையாகி இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியை அவ்வப்போது எச்சரிக்கை செய்து வந்து உள்ளார். ஆனால் மாணவர்கள் இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து அத்தகைய செயலில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாணவர்களின் அட்டகாசம் அத்துமீறியுள்ளது. மாணவர்கள் ஆசிரியையை பார்த்து 'ஐ லவ் யூ' என்று கூறியுள்ளனர். மாணவர்களின் பெற்றோரிடம் புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், இதன் பின்னரும் மாணவர்களின் சேட்டை அடங்கவில்லை. வகுப்பறையில் மட்டுமல்லாது கல்லூரி வளாகத்தின் பொது இடங்களிலும் இவ்வாறு மாணவர்கள் சேட்டை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து ஆசிரியை எவ்வளவோ எடுத்து கூறியும் மாணவர்கள் கேட்கவில்லை.

ஆசிரியையின் பெயர் சொல்லி அழைத்த மாணவர்கள் 'ஐ லவ் யூ. இங்க கொஞ்சம் பாருங்க' என்று கூறியுள்ளனர். இது கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது.இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இதனையடுத்து ஆசிரியை தரப்பில் கித்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஒரு சில மணி நேரங்களிலேயே அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Next Story