மண்டியாவில் சுயநல அரசியல் செய்பவர்களால் எந்த பயனும் இல்லை; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு
மண்டியாவில் சுயநல அரசியல் செய்பவர்களால் எந்த பயனும் இல்லை என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
மல்லேசுவரம்:
மண்டியாவில் சுயநல அரசியல் செய்பவர்களால் எந்த பயனும் இல்லை என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
பாடம் புகட்ட வேண்டும்
பிற கட்சியினர் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் முன்னிலையில் பிற கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தனர். இதில் அஸ்வத் நாராயண் பேசியதாவது:-
மண்டியா மாவட்டம் முன்பு வளர்ச்சியில் புகழ் பெற்று விளங்கியது. தற்போது சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பின்தங்கியுள்ளது. அந்த மாவட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் சரியாக பணியாற்றவில்லை. மண்டியாவில் சுயநல அரசியல் செய்பவர்களால் எந்த பயனும் இல்லை. துரோகம் செய்கிறவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
திறன்மிகு மனிதவளம்
அடிமைத்தனம் பிடிக்காமல் பல தலைவர்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகி வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். மண்டியாவை செழிப்பான மாவட்டமாக மாற்றுவதற்கு பா.ஜனதா எல்லா ரீதியான முயற்சியும் மேற்கொள்கிறது. மண்டியாவின் வளர்ச்சிக்காக அம்மாவட்ட மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். பா.ஜனதாவில் அனைவரும் சுயமரியாதையுடன் பணியாற்ற முடியும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.
பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சுரானா பேசும்போது, "மண்டியா மாவட்டத்தை சேர்ந்த பிற கட்சிகளின் நிர்வாகிகள் பலர் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும். இந்துத்துவா சூழ்நிலை மண்டியா மாவட்டத்தில் நிலவுகிறது. அதனால் அங்கு பா.ஜனதா பலம் அடைந்து வருகிறது'' என்றார்.
பா.ஜனதாவில் ரவுடி?
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பா.ஜனதாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி. கலந்து கொண்டார். இதில் பிரபல ரவுடி 'சைலண்ட்' சுரேஷ் கலந்து கொண்டு தேஜஸ்வி சூர்யாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பா.ஜனதாவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று பேசப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூரு நகர குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த அலோக்குமார், குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பெங்களூருவில் உள்ள ரவுடிகளை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். அப்போது இந்த சைலண்ட் சுரேசையும் அவர் எச்சரித்தார். அவரை நோக்கி அலோக்குமார் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எச்சரிக்கை விடுத்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.