மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஜே.பி.நட்டாவுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று ஆலோசனை


மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஜே.பி.நட்டாவுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 28 Nov 2022 6:45 PM GMT)

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசிக்க உள்ளார்.

பெங்களூரு:

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசிக்க உள்ளார்.

மந்திரிசபை விரிவாக்கம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு 4 இடங்கள் காலியாக வைக்கப்பட்டன. அதன்பிறகு பாலியல் புகாரில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளியும், கமிஷன் குற்றச்சாட்டில் மந்திரி ஈசுவரப்பாவும் பதவி இழந்தனர். இதனால் மந்திரிசபையில் காலியிடங்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 6 ஆக உயர்ந்தது.

பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி ஆன பிறகு இதுவரை மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. பா.ஜனதாவில் மூத்த எம்.எல்.ஏ.க்கள், மந்திரிசபையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கட்சி மேலிடம் அனுமதி அளித்தால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதாக பசவராஜ் பொம்மை கூறி வந்தார். ஆனால் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன.

போதிய காலஅவகாசம்

இந்த நிலையில் பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. ஒருவேளை மந்திரி ஆனாலும் பணியாற்ற போதிய காலஅவகாசம் இல்லாத நிலை உள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.

மந்திரிசபையை தற்போது விரிவாக்கம் செய்வது என்பது மிக தாமதமான ஒன்று என்று அவர்கள் கூறுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் மந்திரிசபையில் இடம் பெற யாருக்கும் ஆர்வம் இல்லை என்றே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று(செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது அவருடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க உள்ளார். அதே நேரத்தில் குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story