அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு..!


அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு..!
x
தினத்தந்தி 21 Jun 2023 6:28 AM GMT (Updated: 21 Jun 2023 6:42 AM GMT)

ஒருவர் மருத்துவமனையில் இருக்கும்போது அவரை காவலில் எடுக்க முடியுமா? என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புதுடெல்லி,

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய கோடைகால சிறப்பு அமர்வில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜாகி செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும்போது, ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்வது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என வாதிட்டார்.

அதையடுத்து அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட்கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? என்றும் அமலாக்கத்துறை ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கக் கூடாது என்று ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவறாக நடந்துள்ளது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிக்கிறது என்றும் மருத்துவமனையில் உள்ளபோது மருத்துவர்கள் கருத்தை கொண்டு தான் விசாரணை நடத்த முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுத்ததாக கருதுகிறோம் என்றும் தற்போதைய நிலையில், உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர்வது தான் சரியாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் இருக்கும்போது அவரை காவலில் எடுக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இறுதியில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்த பின் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை வைத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.





Next Story