மந்திரி உமேஷ்கட்டி மரணம்; கா்நாடகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு; பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்
கர்நாடக உணவு மற்றும் வனத்துறை மந்திரி உமேஷ்கட்டி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கர்நாடகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு;
மாரடைப்பால் இறந்தார்
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் உணவு மற்றும் வனத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் உமேஷ்கட்டி. மூத்த மந்திரியான இவர் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நேற்று இரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இரவு 11.30 மணியளவில் அவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு இதய துடிப்பு, நடித்துடிப்பு இருக்கவில்லை. உடனடியாக அவரது இதயத்தை செயல்பட வைக்க டாக்டர்கள் சி.பி.ஆர். என்று சொல்லக்கூடிய இதய பகுதிக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் நின்றுபோன அவரது இதயம் மீண்டும் செயல்படவே இல்லை. இதையடுத்து அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
மோசமான வானிலை
இறந்த மந்திரி உமேஷ்கட்டிக்கு வயது 61. அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நள்ளிரவு 2 மணியளவில் அந்த தனியார் மருத்துவமனைக்கு மந்திரிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலை பெலகாவிக்கு எடுத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் காலை 6 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.
ஹெலிகாப்டர் மூலம் உடலை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. தனி விமானத்தை வரவழைத்து அவரது உடல் பெலகாவிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த தனியார் விமானம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டதால், உடலை எடுத்து செல்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
சித்தராமையா அஞ்சலி
முன்னதாக எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உமேஷ்கட்டியின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட மந்திரிகள் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். உமேஷ்கட்டி கடந்த 1985-ம் ஆண்டு முதல் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு 8 முறை தேர்ந்து எடுக்கப்பட்டார். இதில் 4 முறை மந்திரியாக இருந்தார். அவர் ஜனதா தளத்தில் இருந்து தனது அரசியலை தொடங்கினார். அக்கட்சி சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
கர்நாடகத்தை 2 ஆக பிரித்து வட கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவரது இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தாலும், அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
மேலும் தான் முதல்-மந்திரிக்கு தகுதியானவன் என்றும், அந்த பதவி மீது தனக்கும் ஆசை இருப்பதாகவும் அவ்வப்போது கூறி வந்தார். மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசக்கூடிய தலைவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் துக்கம்
உமேஷ்கட்டியின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.