அஞ்சலி செலுத்த சென்ற எம்.எல்.ஏ. மீது தாக்குதல்


அஞ்சலி செலுத்த சென்ற எம்.எல்.ஏ. மீது தாக்குதல்
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:46 PM GMT)

சிக்கமகளூருவில் காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்து. இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூருரு:-

யானை தாக்கி பெண் சாவு

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹூல்ஹள்ளியை அடுத்த குந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபா. நேற்று முன்தினம் இவர் தனது கணவனுடன் தோட்டத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானை ஒன்று கணவன், மனைவி இருவரையும் துரத்தியது. இதில் ஷோபா யானையிடம் சிக்கி கொண்டார். அவரை தூக்கி வீசிய காட்டுயானை, காலால் மிதித்து கொன்றது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. ஷோபாவின் உடலை வாங்கி சென்று உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அடக்கம் செய்தனர். இந்த தகவல் அறிந்து மூடிகெரே தொகுதி பா.ஜனதா எல்.எல்.ஏ. குமாரசாமி அங்கு சென்றார்.

எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

அப்போது அவரை சூழ்ந்து கொண்டு கிராம மக்கள் முறையிட்டனர். யானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து அவர்கள், எம்.எல்.ஏ.விடம் கேள்வி எழுப்பினர். மேலும் உடனடியாக யானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட எம்.எல்.ஏ. குமாரசாமி பெண்ணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்தார். ஆனால் அஞ்சலி செலுத்த அனுமதிக்காத கிராம மக்கள் எம்.எல்.ஏ. குமாரசாமியை அங்கிருந்து செல்லும்படி கூறி தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கிராம மக்களுக்கும், எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எம்.எல்.ஏ. குமாசாமியை சிலர் தாக்கி அவரது சட்டையை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ. குமாரசாமி இதுகுறித்து மூடிகெரே போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, கிராமத்தை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story