கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதை எம்எல்ஏக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்


கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதை எம்எல்ஏக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்
x

கோப்புப்படம் 

நில மோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

1,034 கோடி ரூபாய் நிலமோசடி தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை முன் சஞ்சய் ராவத் நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில், இந்த வழக்கில் ஜூலை 20-ம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த தேதியில் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார். இந்நிலையில், மும்பையில் உள்ளநிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையை அடுத்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சித் தலைமைக்கு எதிராக எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டதை எம்.எல் ஏ.க்கள் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

'சாம்னா'வில் வெளியான தனது வாராந்திர கட்டுரையான 'ரோக்தோக்' கட்டுரையில், "சிவசேனா இந்துத்துவாவை கைவிட்டதால் தான் அணி மாறியதாக எதிர்தரப்பினர் கூறுவதை நிறுத்த வேண்டும். இந்துத்துவாவை தேவையில்லாமல் கேவலப்படுத்துவது ஏன்? அனைவரும் ஓடிவிட்டனர் என்று சொல்வதில் நேர்மை காட்டுங்கள். அமலாக்க இயக்குநரகத்திடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்." என்றார்.

நில மோசடி வழக்கில் சிவசேனா (உத்தவ் தாக்கரே ஆதரவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story