பா.ஜனதா எம்.எல்.சி. சங்கர் மீது வழக்குப்பதிவு
ரூ.8 கோடி பரிசு பொருட்கள் சிக்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.சி. சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
ரூ.8 கோடி பரிசு பொருட்கள் சிக்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.சி. சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.8 கோடி பரிசு பொருள்
பா.ஜனதா எம்.எல்.சி.யாக இருந்து வருபவர் ஆர்.சங்கர். இவர், ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் அருகே பீரலிங்கேஷ்வராநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எம்.எல்.சி.யாக இருந்து வரும் ஆர்.சங்கர், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். இந்த நிலையில், பீரலிங்கேஷ்வராநகரில் உள்ள ஆர்.சங்கருக்கு சொந்தமான குடோனில் கடந்த 14-ந் தேதி வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பட்டு சேலைகள், குக்கர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் என்று வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
வழக்குப்பதிவு
ஆர்.சங்கருக்கு சொந்தமான குடோனில் சிக்கிய பரிசு பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அந்த பரிசு பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கோர்ட்டும் ரூ.8 கோடி பரிசு பொருட்கள் சிக்கியது குறித்து ஆர்.சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து, ராணிபென்னூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஆர்.சங்கர் மீது ராணி பென்னூர் தாசில்தார் புகார் அளித்தார். அதன்பேரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பா.ஜனதா எம்.எல்.சி.யான ஆர்.சங்கர் அதிருப்தி அடைந்துள்ளார்.