மாலத்தீவுக்கு இந்தியா தரப்பில் கூடுதலாக 100 மில்லியன் டாலர்கள் நிதியுதவி: கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டப் பணிகள் தொடக்கம்!
500 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவால் நிதியளிக்கப்பட்ட கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
புதுடில்லி,
மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் 4 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.இன்று இருநாட்டு தலைவர்களும், இருதரப்பு நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக, 500 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவால் நிதியளிக்கப்பட்ட கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டப்பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மாலத்தீவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு முயற்சியாகும்.
கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் தலைநகர் மாலேவை வில்லிங்கிலி, குல்ஹி பல்ஹு மற்றும் திலா புஷி ஆகிய தீவுகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6.74 கி.மீ., நீளத்திற்கு பாலம் மற்றும் தரைப்பால இணைப்பு கட்டப்படும். இது குல்ஹி பல்ஹுவில் ஒரு துறைமுகத்தை உருவாக்க உதவும் போது மாலேயின் நெரிசலைக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது இந்தியா – மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் நிதியுதவியுடன் கூடிய இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மாலத்தீவு அரசு ஏற்படுத்தியது. இந்த திட்டம் மாலத்தீவு பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய ஊக்கமாக இருக்கும், ஏனெனில் இது வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கும்.
அக்டோபர் 2020 இல், இந்த திட்டத்தை மேற்கொள்வதற்காக மாலத்தீவுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிரத்யேகக் கடன் வழங்குவதாக இந்தியா அறிவித்தது.
இந்த நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சிறப்பு மானியம் மூலம் இந்தியா இத்திட்டத்தை ஆதரிப்பதாக இன்று பிரதமர் தெரிவித்தார்.
"மாலியில் 4000 சமூக வீடுகளை கட்டுவதற்கான திட்டங்களையும் மதிப்பாய்வு செய்தோம். 2000 சமூக வீடுகளுக்கு நிதி உதவி வழங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாலத்தீவின் எந்தவொரு தேவை அல்லது நெருக்கடிக்கும் இந்தியா முதலில் உதவி செய்யும் நாடாக இருந்து வருகிறது, அது தொடரும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த சலுகைக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அதிபர் சோலி, இந்த கூடுதல் நிதி மூலம் பல பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.