குளத்தில் தவறி விழுந்து தாய்-மகள் பலி
சிக்கமகளூரு அருகே மாடு மேய்க்க சென்றபோது, குளத்தில் கால் தவறி விழுந்து தாய், மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு அருகே மாடு மேய்க்க சென்றபோது, குளத்தில் கால் தவறி விழுந்து தாய், மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குளத்தில் மூழ்கிய தாய், மகள்
சிக்கமகளூரு மாவட்டம் பெலவாடி அருகே உள்ள வட்ரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபா(வயது 40), இவருக்கு வர்ஷா(7) என்ற மகளும் சேத்தன்(5) என்ற மகனும் உள்ளனர். ஷோபா சொந்தமாக மாடுகளை வளர்த்து வந்தார். தினமும் இந்த மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வட்டரேஹள்ளி பகுதியில் உள்ள குளத்தின் அருகே மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அவருடன் மகன், மகள் இருவரையும் அழைத்து சென்றிருந்தார்.
தினமும் இந்த குளத்தை தாண்டிதான் வீட்டிற்கு செல்லவேண்டும். அதன்படி முதலில் தனது மகள் வர்ஷாவை நீரில் நடந்து செல்லும்படி கூறினார். சிறுமி வர்ஷா நடந்து செல்லும்போது, திடீரென்று ஆழமான பகுதிக்குள் காலை வைத்ததாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய சிறுமி நீரில் மூழ்கினார். இதை பார்த்த தாய் ஷோபா, கதறி கூச்சலிட்டப்படி நீரில் மூழ்கிய மகளை காப்பாற்ற இறங்கினார். அப்போது அவரும் ஆழமான பகுதியில் கால் வைத்தார்.
சிறுவன் உயிர் தப்பினான்
இதில் நிலை தடுமாறிய அவரும் நீரில் மூழ்கினார். தாய், சகோதரி நீரில் மூழ்கியதை சிறுவன் சேத்தன் பார்த்து, குளத்தில் இறங்கினார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர், சிறுவனை மீட்டனர். ஆனால் தாய் மற்றும் சிறுமியை மீட்க முடியாமல் போனது. இதுகுறித்து அவர்கள் சிக்கமகளூரு புறநகர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.