முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தாருக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x

Image Courtesy : AFP 

முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு வழங்கும் பாதுகாப்பை தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதுடெல்லி,

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தாருக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற எச்சரிக்கை மற்றும் மராட்டிய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அவரது மனைவி நீதா அம்பானிக்கு வை பிரிவு பாதுகாப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த திரிபுரா ஐகோர்ட் என்ன மாதிரியான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சில தினங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவில், இந்த விவகாரத்தில் திரிபுரா கோர்ட்டுக்கு எந்த விதமான அதிகார வரம்பும் இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு எதிராக பொதுநல மனுதாக்கல் செய்யமுடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, திரிபுரா ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு மீது தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மத்திய அரசு வழங்கும் பாதுகாப்பை தொடரலாம் என உத்தரவிட்டனர்.


Next Story