புதிய வகை கொரோனா அச்சுறுத்தல்; பொது இடங்களில் முககவசம் அணியுங்கள் - மும்பை மாநகராட்சி


புதிய வகை கொரோனா அச்சுறுத்தல்; பொது இடங்களில் முககவசம் அணியுங்கள் - மும்பை மாநகராட்சி
x

உருமாறிய புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு சோதனை

உருமாறிய பி.எப்.7 ஒமைக்ரான் வைரஸ் உலகிற்கு புதிய அச்சுறுத்தலாகி உள்ளது. இந்த வைரஸ் காரணமாக சீனா, ஜப்பான், அமெரிக்க போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனவே இந்தியாவில் உருமாறிய வைரசால் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மும்பையிலும் நோய் பரவலை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி உருமாறிய வைரசால் நோய் பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மும்பை விமான நிலையம் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரி மரபணு சோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

முககவசம் அணிய வேண்டும்

மும்பையில் செவன் ஹில்ஸ், கஸ்தூர்பா ஆகிய 2 மாநகராட்சி மற்றும் 4 அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 26 தனியார் ஆஸ்பத்திரிகளில் 871 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. திரவ ஆக்சிஜன் தேவையான அளவு வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறோம். பொது மக்கள் அடிக்கடி கைகளை கழுவி, உடல்நலம் பாதிக்கப்பட்டால் வீட்டில் இருக்க வேண்டும். முதியவர்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள வேண்டும். மும்பை மாநகராட்சி தடுப்பூசி முகாம்களை நடத்துவதில் கவனம் செலுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story