மும்பையில் தென்கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை - கைதான 2 இளைஞர்களுக்கு ஜாமீன்
தென்கொரிய யூடியூபர் மும்பையின் பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார்.
மும்பை,
தென்கொரியாவை சேர்ந்த யூடியூபர் ஹியொஜியாங். இவர் மியோச்சி (Mhyochi) என்ற பெயரில் யூடியூபில் கணக்கு வைத்துள்ளார்.
இவர் கடந்த மாதம் 29-ம் தேதி மராட்டிய மாநிலம் மும்பையின் ஹேர் பகுதியில் உள்ள பரபரப்பான தெருவில் நடந்து சென்று அதை சமூகவலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு (லைவ் ஸ்டிரீம்) செய்துகொண்டிருந்தார்.
அப்போது, ஹியொஜியாங்கை இடைமறித்த இளைஞர் அவரது கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார். பின்னர் சாலையோரம் இழுத்து சென்று ஹியொஜியாங்கிற்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்தது முத்தம் கொடுக்க முயற்சித்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் சமூகவலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
பின்னர் அந்த இளைஞரிடமிருந்து விடுபட்டு தப்பிய ஹியொஜியாங் சாலையில் வேகமாக நடந்து சென்றார். அப்போது, அந்த இளைஞர் தனது நண்பருடன் பைக்கில் ஹியொஜியாங்கை பின் தொடர்ந்து வந்து தன்னுடன் பைக்கில் வருமாறு தொந்தரவு கொடுத்தார்.
அப்போது, அவ்வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த அதர்வா என்ற இளைஞர், பைக்கில் பின் தொடர்ந்து வந்து ஹியொஜியாங்கிற்கு தொல்லை கொடுத்த 2 இளைஞர்களையும் தடுத்து நிறுத்தினார். அதர்வா தடுத்து நிறுத்தியதால் பைக்கில் வைத்த 2 பேரும் அங்கிருந்து சென்றனர்.
இதனையடுத்து, ஹியொஜியாங்கிற்கு பாதுகாப்பாக அதர்வா மற்றொரு இளைஞரான ஆதித்யா 2 பேரும் சிறிது தூரம் நடந்து சென்று அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தென்கொரிய யூடியூபர் ஹியொஜியாங்கிற்கு பாலியல் தொல்லை அளித்த முபின் சந்த் முகமது ஷேக் மற்றும் முகமது நகியுப் சத்ரியலாம் அன்சாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேரும் ஜாமீன் கோரி பாந்திரா மெட்ரோபொலிடன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு தலா 10 ரூபாய் பிணைத்தொகையுடன் முகமது ஷேக், முகமது நகியுப் ஆகிய 2 பேருக்கும் ஜாமின் வழங்கியது.
ஜாமின் கிடைத்ததையடுத்து 2 பேரும் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.