கோலார் தங்கவயலில் பரபரப்பு: பெண் போலீஸ் சூப்பிரண்டுடன் முனிசாமி எம்.பி. கடும் வாக்குவாதம்


கோலார் தங்கவயலில் பரபரப்பு:  பெண் போலீஸ் சூப்பிரண்டுடன் முனிசாமி எம்.பி. கடும் வாக்குவாதம்
x

கோலார் தங்கவயலில் பெண் போலீஸ் சூப்பிரண்டுடன் முனிசாமி எம்.பி. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் தங்கவயல்: கோலார் தங்கவயலில் பெண் போலீஸ் சூப்பிரண்டுடன் முனிசாமி எம்.பி. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலை விரிவாக்க பணி

பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலார் பங்காருபேட்டை பி.இ.எம்.எல். நகர் மார்க்கமாக சென்னை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று பொதுபணித்துறை அதிகாரிகள் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர்.

சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த கடைகளை அதிகாரிகள் இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டனர். அப்போது முனிசாமி எம்.பி. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு ஏராளமானோர் திரண்டனர்.

வாக்குவாதம்

அப்போது கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்ட சூப்பிரண்டு தரணி தேவி சம்பவ இடத்திற்கு வந்தார். அவர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் போலீசாரிடம் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவியிடம், முனிசாமி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சாலை விரிவாக்கத்திற்கு இடையூராக இருக்கும் கட்டிடங்களை அகற்றும்போது போலீசார் தாமாக முன்வந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும். அதை விடுத்து பாதுகாப்பு அளிக்கும்படி போலீசாருக்கு கடிதம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறி போலீஸ் சூப்பிரண்டிடம், முனிசாமி எம்.பி. கடிந்து கொண்டார்.

பரபரப்பு

அதற்கு பதில் அளித்த சூப்பிரண்டு தரணி தேவி, ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பினார். அப்போது முனிசாமி எம்.பி., 'போலீஸ் சூப்பிரண்டான நீங்கள் கட்டிட உரிமையாளர்களுக்காக சிபாரிசு பேச வந்துள்ளீர்களா? என்று கேட்டார். இதனால் போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவிக்கும், முனிசாமி எம்.பி.க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.


Next Story