பெங்களூருவில் 3½ வயது மகளை கொன்று தமிழக பெண் தற்கொலை முயற்சி


பெங்களூருவில் 3½ வயது மகளை கொன்று தமிழக பெண் தற்கொலை முயற்சி
x

பெங்களூருவில் 3½ வயது மகளை கொன்று தமிழக பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் 3½ வயது மகளை கொன்று தமிழக பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

தமிழ்நாடு ஈரோட்டை சேர்ந்தவர் நரேந்திரன்(வயது 30). இவரது மனைவி காயத்ரிதேவி(23). இவர் தர்மபுரியை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் 2 பேருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3½ வயதில் சம்யுக்தா என்ற பெண் குழந்தை இருந்தது. நரேந்திரன் தனது மனைவி, குழந்தையுடன் பெங்களூரு எச்.ஏ.எல். அருகே தொட்டனகுந்தி குருராஜா லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு சென்று இருந்த நரேந்திரன் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு வந்தார். அவர் வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தார். அப்போது காயத்ரிதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நரேந்திரன் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று காயத்ரிதேவியை மீட்டார். பின்னர் தனது குழந்தையை வீட்டிற்குள் தேடினார். அப்போது கழிவறைக்குள் இருந்த டப்பில் குழந்தை சம்யுக்தா இறந்து கிடந்தது.

மாமியார் இறந்த அதிர்ச்சியில்...

இதனால் அதிர்ச்சி அடைந்த நரேந்திரன் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். சம்பவம் பற்றி அறிந்ததும் எச்.ஏ.எல். போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற காயத்ரிதேவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கொன்று காயத்ரிதேவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதற்கிடையே காயத்ரிதேவி எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் எனக்கு கஷ்டத்தை தாங்கும் சக்தி இல்லை. நான் இறந்த பின்னர் குழந்தையை கவனிக்க யாரும் இல்லை. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்தது.

காயத்ரிதேவிக்கு சிறிய வயதில் இருந்தே தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், இதனால் அவர் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் நரேந்திரனின் தாய் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து இருந்தார். இதனால் மாமியார் இறந்த அதிர்ச்சியில் குழந்தையை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நரேந்திரன் அளித்த புகாரின்பேரில் எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story