போலீஸ் நிலையத்தில் கஞ்சா வியாபாரி மர்ம சாவு
பெலகாவி அருகே, போலீஸ் நிலையத்தில் கஞ்சா வியாபாரி திடீரென உயிரிழந்தார். அவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
பெலகாவி:
பெலகாவி அருகே, போலீஸ் நிலையத்தில் கஞ்சா வியாபாரி திடீரென உயிரிழந்தார். அவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
கஞ்சா வியாபாரி சாவு
பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா பெல்லத பாகேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பசனகவுடா பட்டீல்(வயது 45). இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த ஒரு வழக்கு குறித்து விசாரிப்பதற்காக பசனகவுடாவை, பெலகாவி புறநகர் போலீசார் அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரித்தனர். விசாரணையின் போது பசனகவுடாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் பசனகவுடாவை பெலகாவி டவுனில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அப்போது பசனகவுடாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பசனகவுடாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
நியாயம் கிடைக்கும் வரை...
தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த குடும்பத்தினர், பசனகவுடாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த நிலையில் போலீஸ் காவலில் பசனகவுடா அடித்து கொல்லப்பட்டதாக அவரது மகள் ரோகிணி பட்டீல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'எனது தந்தை பசனகவுடாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளனர்.
திடீரென எனது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாக போலீசார் கூறினர். ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது எனது தந்தை இறந்து விட்டார். எனது தந்தையின் கையில் கயிறால் கட்டப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. அவரது சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்' என்றார்.
சி.ஐ.டி. விசாரணை
இதற்கிடையே பசனகவுடா மரணம் பற்றி அறிந்ததும் பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா ஆஸ்பத்திரிக்கு சென்று போலீசாரிடமும், பசனகவுடாவின் குடும்பத்தினரிடம் விசாரித்து தகவல்களை பெற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெலகாவி புறநகர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பசனகவுடா என்பவர் உயிரிழந்து உள்ளார். பெல்லத பாகேவாடியில் இருந்து பெலகாவிக்கு அழைத்து வந்த போது பசனகவுடாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை காகதி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்று சிகிச்சை அளித்து உள்ளனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.
அங்கு வைத்து அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் பெலகாவி அரசு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பசனகவுடா உயிரிழந்து உள்ளார். அவரது மரணம் குறித்து குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதனால் இந்த வழக்கில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும். போலீசார் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பசனகவுடா உயிரிழந்த விவகாரம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.