கர்நாடகத்தில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் 5 ஆண்டுகளில் அமலுக்கு வரும்


கர்நாடகத்தில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் 5 ஆண்டுகளில் அமலுக்கு வரும்
x

தொழில் முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் அமலுக்கு வரும் என்று தொழில் துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.

பெங்களூரு:

தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் சமீபத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். இதில் சுமார் ரூ.9.81 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 75 சதவீத ஒப்பந்தங்களை நிச்சயம் செயல்படுத்துவோம். இன்னும் 5 ஆண்டுகளில் இந்த ஒப்பந்தங்கள் அமலுக்கு வரும். தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர், மின்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த பணிகள் வேகமாக நடக்கின்றன. புள்ளி விவரங்களை அதிகரிக்க நாங்கள் ஒப்பந்தங்கள் போடவில்லை. செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை செயல்படுத்துவதே எங்களின் குறிக்கோள்.

உண்மையிலேயே தொழில் தொடங்க யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அனுமதி கடிதம் கொடுக்கிறோம். புதிதாக போடப்பட்ட தொழில் ஒப்பந்தங்களில் 90 சதவீதம் 2, 3-ம் நிலை நகரங்களுக்கானது. கர்நாடகத்தில் இதுவரை தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு சுமார் அரை சதவீதம் அளவுக்கு மட்டுமே நிலத்தை ஒதுக்கியுள்ளோம். கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசலில் எத்தனாலை கலப்படம் செய்ய அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். இதனால் சுற்றுச்சூழல் மீது ஏற்படும் பாதிப்புகள் குறையும். பஞ்சமசாலி உள்பட அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அரசு மீதான கமிஷன் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. இதில் உண்மை இல்லை.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.


Next Story