முஸ்லிம் பெண் டாக்டர்கள், அதிகாரிகள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும்: அஜ்மல் எம்.பி. மீண்டும் சர்ச்சை பேச்சு


முஸ்லிம் பெண் டாக்டர்கள், அதிகாரிகள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும்:  அஜ்மல் எம்.பி. மீண்டும் சர்ச்சை பேச்சு
x

தொழில் கல்வி படித்த பெண்கள் முஸ்லிம்கள் என அங்கீகரிக்கப்படும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் பேசினார்.

கவுகாத்தி,

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான பத்ருதீன் அஜ்மல், அசாமின் கரீம்கஞ்ச் பகுதியில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.

அவர் கூட்டத்தில் பேசும்போது, பெண்கள் படிக்க வேண்டும். மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அறிவியல் படிப்பை தொடர வேண்டும். டாக்டராக வேண்டும். அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ, ஐ.பி.எஸ். அதிகாரியாகவோ அல்லது அசாம் போலீஸ் அதிகாரியாகவோ ஆக வேண்டும் என பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், தொழில் கல்வி படித்த பெண்கள் முஸ்லிம்கள் என அங்கீகரிக்கப்படும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் பேசினார்.

கடந்த ஆண்டு அஜ்மல் கூறும்போது, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்றங்களிலும் நாம் (முஸ்லிம்கள்) நம்பர் ஒன்னாக இருக்கிறோம். சிறைக்கு செல்வதிலும் நம்பர் ஒன்னாக நாம் இருக்கிறோம் என பேசி சர்ச்சை ஏற்படுத்தினார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் அவர் பேசும்போது, 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை முஸ்லிம்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும். ராமஜென்ம பூமியில் நிறுவப்படும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும். லட்சக்கணக்கான மக்கள் பஸ்களிலும், ரெயில்களிலும், விமானங்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் பயணம் மேற்கொள்வார்கள்.

நாம் அமைதி காக்க வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக, நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் இந்த காலகட்டத்தில் ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

இந்த காலகட்டத்தில், நாம் பயணம் செய்யாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும். பா.ஜ.க. பெரிய திட்டங்களை வைத்திருக்கிறது. முஸ்லிம்களின் பெரிய எதிரியாக பா.ஜ.க. உள்ளது. நம்முடைய வாழ்க்கை, நம்பிக்கை, மசூதிகள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆசன் ஆகியவற்றுக்கு எதிரியாக உள்ளது என்றும் அவர் பேசியது சர்ச்சையானது. இதற்கு பா.ஜ.க.வும் பதிலடி அளித்தது.


Next Story