பாபாபுடன் கிரியில் முஸ்லிம்கள் போராட்டம்


பாபாபுடன் கிரியில் முஸ்லிம்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 March 2023 6:45 AM GMT (Updated: 10 March 2023 6:45 AM GMT)

உரூஸ் திருவிழாவை கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாபாபுடன் கிரி மலையில் முஸ்லிம்கள் திடீரென்று போராட்டம் நடத்தினர்.

சிக்கமகளூரு-

பாபாபுடன் கிரி

சிக்கமகளூரு மாவட்டம் சந்திரதிரிகோண மலையில் பாபாபுடன் கிரி மற்றும் தத்தா பீடம் அமைந்திருக்கிறது. இந்த கோவிலை முஸ்லிம்களும், இந்துக்களும் தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இப்பிரச்சினையில் இருதரப்பினரிடம் பேசி மாநில அரசே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது.

அதன்படி இந்த கோவிலில் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் தனித்தனியாக பூஜைகள் செய்து கொள்ளவும், அதனை கண்காணிக்க குழு அமைத்தும் மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது இந்த கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தத்தா ஜெயந்தி விழா

அந்த குழுவினர் வெளியிட்ட வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள்படி தத்தா ஜெயந்தி விழா நடந்து முடிந்தது. இந்த நிலையில் பாபாபுடன் கிரி பகுதியில் முஸ்லிம்கள் கொண்டாடும் உரூஸ் திருவிழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்க இருந்தது. இந்த உரூஸ் திருவிழாவை கொண்டாட நிர்வாக குழுவினரும், மாவட்ட நிர்வாகமும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை முஸ்லிம் மக்கள் ஏற்று கொள்ளவில்லை. இதனால் அவர்கள் உரூஸ் திருவிழாவை நடத்தாமல் கைவிடவும் முன்வந்து இருக்கிறார்கள்.

தத்தா ஜெயந்தி விழாவுக்காக இந்துக்களுக்கு யாகம், பூஜைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்து அர்ச்சகரையும் அரசு நியமித்து கொடுத்தது. அதேபோல் எங்களுக்கான கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றி கொடுத்தால் நாங்கள் உரூஸ் திருவிழாவை கொண்டாடுவோம் என்றும் தெரிவித்தனர்.

போராட்டம்

இந்தநிலையில் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாததால் பாபாபுடன் கிரி மலையில் முஸ்லிம்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டருடன், உரூஸ் கமிட்டியினரும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உரிய முடிவு எட்டப்பட்டால் மட்டுமே உரூஸ் திருவிழா நடத்தப்படும் என்று முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்தனர். பாபாபுடன் கிரி மலைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



Next Story