எனது தந்தை சித்தராமையாவின் உயிருக்கு ஆபத்து- யதீந்திரா எம்.எல்.ஏ. பேட்டி

எனது தந்தை சித்தராமையாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக யதீந்திரா எம்.எல்.ஏ. கூறினார்.
மைசூரு: எனது தந்தை சித்தராமையாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக யதீந்திரா எம்.எல்.ஏ. கூறினார்.
அரசு மெத்தனம்
மைசூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் மகன் யதீந்திரா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் தந்தை சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. என் தந்தை உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் அரசு மெத்தனம் காட்டுகிறது. மகாத்மா காந்தியை கொன்றவர்கள் எங்களை மட்டும் விட்டு விடுவார்களா?.
போலீசாருக்கு கண்டனம்
எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் முதல்-மந்திரிக்கு சமமானவர். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. என் தந்தை சித்தராமையா, குடகு மாவட்டத்திற்கு வருவார் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல் பா.ஜனதாவினரை ஆர்ப்பாட்டம் நடத்தவும், முட்டை வீசவும் அனுமதித்த போலீசாருக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்திற்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.