நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன்பு டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜர்


நேஷனல் ஹெரால்டு வழக்கு:  அமலாக்கத்துறை முன்பு டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜர்
x

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்பு டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஆஜரானார்.

பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான யங் இந்தியா என்ற நிறுவனத்திற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோர் அதிகளவில் நிதி அளித்தது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேசுக்கு அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பி இருந்தது. ஆனால் டி.கே.சுரேஷ் மட்டும் ஆஜராகி இருந்த நிலையில், டி.கே.சிவக்குமார் கால அவகாசம் கேட்டு இருந்தார். ஆனாலும் அவர் அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை அனுப்பி வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று டி.கே.சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அளித்து உள்ளேன். நான் முன்கூட்டியே சில ஆவணங்களை அனுப்பி இருந்தேன். அதில் அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. நாங்கள் அமலாக்கத்துறையையும், அவர்கள் அனுப்பிய நோட்டீசையும் மதிக்கிறோம். யங் இந்தியா நிறுவனத்திற்கு நாங்கள் கொடுத்தது நன்கொடை தான். நிறைய பேர் நன்கொடை அளித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story