கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதும் இயல்பு நிபுணர்கள் சொல்கிறார்கள்


கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதும் இயல்பு நிபுணர்கள் சொல்கிறார்கள்
x

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

புதுடெல்லி, ‌‌

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதையொட்டி மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், "ஒரு பெருந்தொற்று நோய், உள்ளூர் தொற்று நோயாக மாறுகிற தருணங்களில் பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதும் இயல்பான ஒன்றுதான்" என தெரிவித்துள்ளனர். தொற்று நோய் நிபுணர் சந்திரகாந்த் லஹாரியா கருத்து தெரிவிக்கையில், "கொரோனா தொற்று சில மாதங்களுக்கு முன்பு இருந்ததுபோல உள்ளது. எனவே நேரத்துக்கு நேரம் தொற்று பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைவதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் கவலைப்பட ஒன்றும் இல்லை" என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று நோய் இனி சவாலாக இருக்காது" எனவும் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூடுதல் தலைமை இயக்குனர் டாக்டர் சமீரன் பாண்டா கூறும்போது, "குறிப்பிட்ட சில மாவட்டங்களின் பகுதிகளில் தொற்று அதிகரிப்பது, ஒட்டுமொத்த மாவட்டத்திலோ, மாநிலத்திலோ தொற்று அதிகரிக்கும் என பார்க்கக்கூடாது. இந்த தொற்று பாதிப்பு தீவிர பாதிப்பையோ, ஆஸ்பத்திரி சேர்க்கையையோ, இறப்புகளையோ ஏற்படுத்தாது" என தெரிவித்தார். எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் சஞ்சய் ராய் கூறுகையில், "தற்போது தொற்று அதிகரிக்கிற போக்கு இயல்பானதுதான். தொற்று பாதிப்பு தீவிரம் அடையாமலும், ஆஸ்பத்திரி சேர்க்கை அதிகரிக்காமலும், இறப்பு எண்ணிக்கை உயராமலும் இருக்கிற வரையில் கவலைப்பட ஒன்றும் இல்லை" என குறிப்பிட்டார்.


Next Story